Thursday, May 7, 2009

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்

tbltnsplnews_86853754521

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. சித்திரைத் திருவிழா ஏப்., 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 3ல் அம்மனுக்கு பட்டாபிஷேகமும், மே 5ல் திருக்கல்யாணமும் நடந்தது. இரவு மாசி வீதிகளில் சுவாமியும், அம்மனும் வலம் வந்து இரவு 12.30 மணியளவில் கோவிலுக்கு திரும்பினர். நேற்று தேரோட்டம் என்பதால் உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும் அதிகாலை 3 மணிக்குள் செய்யப்பட்டன. சித்திரைத் திருவிழாவிற்கென காப்பு கட்டிய பட்டர்கள் அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை செய்தனர்.
தேர்களை பாதுகாத்துவரும் தேரடி கறுப்பு சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு பூஜை செய்து சுவாமியையும், அம்மனையும் தேர்களில் எழுந்தருள செய்தனர். சக்கரங்களுக்கு பூசணிக்காய் பலி கொடுத்து, "ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா...' என பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே சுவாமி தேர் காலை 6.05 மணிக்கு புறப்பட்டது. ஆடி அசைந்து விளக்குத்தூண் சந்திப்பிற்கு வர, காலை 7.05 மணிக்கு அம்மன் தேர் புறப்பட்டது. மாசி வீதிகளில் வலம் வந்து காலை 11 மணிக்கு அடுத்தடுத்து நிலைக்கு வந்தன.
அம்மனுக்கும், சுவாமிக்கும் மன்னர் திருமலை நாயக்கர் செய்து கொடுத்த விலை மதிப்புடைய கற்கள் பதித்த நகைகள் அனைத்து விழாக்களிலும் அணிவிப்பது வழக்கம். தேரோட்டத்தின்போது மட்டும் அணிவிப்பதில்லை. தேர் ஆடி அசைந்து வரும்போது அதிர்வு காரணமாக கற்கள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் மாலை 3 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சகல மரியாதைகளுடன் கிரீடம் மற்றும் தங்க நகைகள் ஊர்வலமாக எடுத்து வந்து தேர்களில் வீற்றிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவிக்கப்பட்டன. நேற்று பிரதோஷம் என்பதால் கோவிலுக்கு இருவரும் திரும்பியவுடன் பிரதோஷ அபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களாக இருவரும் தனித்தனி வாகனங்களில் உலா வந்தனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காக நேற்றிரவு 7.30 மணிக்கு சப்தாவர்ணச் சப்பரத்தில் இருவரும் உலா வந்தனர். கோவிலுக்கு திரும்பிய பிறகு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று(மே 7) கோவில் பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன் 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது

(நன்றி - தினமலர்)

 

No comments: