Sunday, May 3, 2009

மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா ஸ்பெஷல்

tblfpnnews_9793817997 வாடகை என்ன தர வேண்டும்: நானே உலகத்தின் அதிபதி என்ற முறையில், இன்று அன்னை மீனாட்சி பட்டம் சூடிக்கொள்கிறாள். அதனால் தான் இன்று சுவாமியும், அன்னையும் இன்று வெள்ளி சிம்மாசன வாகனத்தில் பவனி வருகின்றனர். அவளுக்கு மட்டும் தான் சிம்மாசனம் இருக்கிறதா? அவள் தன் குடிமக்களும் நன்றாக இருக்க வேண்டுமே என்பதற்காக, சூரியன், சந்திரன், நதி, கடல் என சகல வசதிகளையும் கொண்ட விலை மதிப்பு மிக்க உலகத்தையும் தந்திருக்கிறாள். ஆனால், என்ன தான் இருந்தாலும் சும்மா தருவாளா? ஒருவரது இடத்தில் நாம் தங்கினால் அதற்கு வாடகை கொடுத்தாக வேண்டுமே! அதுபோல் அவளும் நம்மிடம் வாடகை எதிர்பார்க்கிறாள். அந்த வாடகை எவ்வளவு என்பதை நமக்கு தெரிய வைப்பதே எட்டாம் திருவிழா. இறைவனுக்கு எட்டு வகை குணங்கள் உண்டு. அந்த எட்டு குணங்களும் நம்மிடமும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். அவை என்னென்ன?

முற்றும் உணர்தல்: நாம் யார், நமக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது, இங்கேயே தங்க வேண்டும் என்று நினைக்கிறாமே! இது நியாயமா என்று உணர்வது. வரம்பில் இன்பமுடைமை: நமக்கென ஆண்டவன் இவ்வளவு ஆயுள், இவ்வளவு வசதி வாய்ப்பு என நிர்ணயித்துள்ளான். அந்தக் காலத்தையும், வசதியையும் வரம்பு மீறிய செயல்களுக்கு பயன்படுத்தாமல் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்துதல். பாசத்தை விட்டு நீங்குதல்: நாம் குடும்பத்திற்கு வேண்டிய பணிவிடையைச் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் நன்றி மறந்தாலோ, பிரிந்து சென்றாலோ, நாமே பிரிய வேண்டிய நிலை வந்தாலோ, அந்த உறுப்பினர்களில் ஒருவரை இழக்க வேண்டி வந்தாலோ வருத்தப்படாத தன்மை.

முடிவில் ஆற்றல் உடைமை: எடுத்த முடிவில் விடாப்பிடியாக இருந்து சாதித்தல். தன் வசப்படுதல்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து உறுப்புகளும் நமக்கு வசப்பட்டு இருத்தல். பேரருள் உடைமை: பிறர் மீது அன்பு செலுத்துதல். இயற்கை உணர்வுடைமை: என்ன நடந்தாலும் "இது உலக இயற்கை தானே' என்று எளிதாக எடுத்துக் கொள்ளுதல்.

தூய உடம்புடையனாதல்: இவ்வுலக வாழ்வு உனக்குச் சொந்தம் என்ற மாய எண்ணத்தை விட்டு இறைவனால் தரப்பட்ட இவ்வுடலை மீண்டும் அவனிடமே சேர்க்க வேண்டும் என உணருதல். இந்த எட்டு குணங்களும் நம்மில் அநேகரிடம் இல்லை. ஏன்...இதுபற்றி சிந்தித்துக் கூட பார்த்ததில்லை. ""எங்களிடம் இந்த குணங்களே இல்லை. எனவே, உனக்கு பலநாள் வாடகை பாக்கி வைத்துள்ளோம். இந்த எட்டு குணங்களையும் எங்களுக்கு தந்து உன் வாடகையை கழித்துக்கொள்,'' என இந்நாளில் தாய் மீனாட்சியிடமும், தந்தை சுந்தரேஸ்வரரிடமும் கேட்க வேண்டும்.

( நன்றி - தினமலர்)

No comments: