Thursday, May 7, 2009

கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன்' புறப்பட்டார் கள்ளழகர்

tbltopnews_48056757451

அழகர்கோவில்: கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் பக்தர்களின் "கோவிந்தா' கோஷம் முழங்க தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர். மே 9ம் தேதி காலை 7 மணிக்கு மேல் வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சித்திரை திருவிழா மே 5ம் தேதி துவங்கியது. முதல் இரண்டு நாட்களும் தோளுக்கினியாள் திருக்கோலத்தில் தோன்றிய பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவிழாவின் முக்கிய விழாவான ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக மாலை 6 மணிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப் பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். கோவிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா' கோஷம் முழங்க கள்ளழகரை தரிசித்தனர். பின் 18ம் படி கருப்பண சுவாமி சன்னிதி முன்புள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் வையாழி நிகழ்ச்சியும், கொம்பு சாத்தும் நிகழ்ச்சியும் நடந்தன. சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் முடிந்து கோவில் காவல் தெய்வமான கருப்பண சுவாமியிடம் உத்தரவு பெற்று இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார்.

எதிர்சேவை: இரவு 11 மணிக்கு அப்பன் திருப்பதி சீனிவாச கல்யாண பெருமாள் கோவில் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நாளை அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு கள்ளழகர் காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வருகிறார். அங்கு பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து புதூரிலும், மாலையில் தல்லாகுளத்திலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோவில் வரும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன.

வைகை ஆற்றில் இறங்குறார்: மே 9ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னிதி எதிரில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அங்கிருந்து புறப்பட்டு வழியில் உள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் லட்சக் கணக்கான பக்தர்களின் "கோவிந்தா' கோஷம் முழங்க காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின் காலை 11 மணிக்கு ராமராயர் மண்டகபடி சென்றடைகிறார். அங்கு பக்தர்களின் தண்ணீர் பீச்சும் நிகழ்ச்சியும், அங்கப்பிரதட்சணமும் நடக்கிறது. அன்று இரவு வண்டியூர் பெருமாள் கோவிலை சென்றடைகிறார்.

(நன்றி - தினமலர்)

No comments: