Tuesday, March 31, 2009

புதுக்கணக்கு துவங்கும் நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்தோத்திரம்
அன்னை மீனாட்சியையும், உலக நாயகர் சுந்தரேஸ்வரரையும் கும்பாபிஷேகத்தை ஒட்டி மனமுருகி பிரார்த்திக்க, பதஞ்சலி மகரிஷி அருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்தோத்திரத்தின் பொருளை கூட்டாக அமர்ந்து, ஒருவர் வாசிக்க மற்றவர்கள் இதைச் சொன்னால் நம் வீட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்கும், செல்வச் செழிப்பு ஏற்படும், நிம்மதி பிறக்கும். அது மட்டுமல்ல! இன்று புதுக்கணக்கு துவங்கும் வேளையில், இதை பாராயணம் செய்யும் வியாபாரிகள் நிறைந்த லாபம் அடைவார்கள்.

1. பொற்றாமரை குளக்கரையில் வசிப்பவரும், கருட வாகனத்தில் வரும் விஷ்ணுவுக்கு பிரியமானவரும், கோடி சூரியப்பிரகாசம் கொண்டவரும், மீனாட்சிஅம்மையோடு விளையாடல் புரிபவரும், நாகாபரணம் அணிந்தவரும், எப்போதும் மங்களத்தை தருபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்

.2. தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கையையும், பிறைச்சந்திரனையும் தலையில் கொண்டவரும், சூரியன், சந்திரன், அக்னி என்னும் மூன்று கண்களை உடையவரும், சர்ப்பங்களை குண்டலங்களாக அணிந்தவரும், புண்ணியாத் மாக்களின் பந்துவாக இருப்பவருமாகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

3. நான்முகனாகிய பிரம்ம தேவர் அருளிய நான்கு வேதங்களால் துதிக்கப்படுபவரும், மகாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதிதேவியை இடப்பாகத்தில் உடையவரும், புருஷார்த்தங்களை கொடுப்பவரும், மிக அழகுற தாண்டவம் ஆடுபவரும் மங்களத்தின் இருப்பிடமும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்

4. இலையுதிர்கால சந்திரனைப் போல அழகான பவள நிறம் கொண்ட கீழ் உதட்டோடு பிரகாசிக்கின்ற முகமண்டலத்தை கொண்டவரும், கையில் இருக்கும் கபாலத்தில் உள்ள ரத்தத்தைப் புசிப்பவரும், மங்களத்தின் இருப்பிடமும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

5. மகா விஷ்ணு ஆயிரம் தாமரை மலர்களால் பூஜித்த போது, ஒரு மலர் குறைந்ததால் தன் தாமரை போன்ற கண்களையே பூவாக அர்ச்சிக்க ஆயிரம் சூரிய மண்டலம் போல பிரகாசிக்கும் சக்கரத்தை கொடுத்தவரும், மங்களத்தின் இருப்பிடமும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

6.பூமியைத் தேராகவும், மகாவிஷ்ணுவை அம்பாகவும், மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், பிரம்மனை சாரதியாவும், நான்கு வேதங்களைக் குதிரையாகவும் கொண்டு விளங்குபவரும், மங்களத்தின் இருப்பிடமுமாகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

7. தட்ச யாகத்திற்கு வந்த பாதாளவாசிகள், சொர்க்கவாசிகள், மிகப்பெரிய உடலைக் கொண்ட வீரபத்திரரின் சிங்கத்திற்கு ஒப்பான கர்ஜனையைக் கேட்டு பயந்தனர். பயந்தவர்களுக்கு அபயம் அளித்து காப்பாற்றுபவரும், அப்போது சப்தம் எழுப்பிய சப்த பிரபஞ்சங்களுக்கும் சாட்சியாய் இருப்பவருமான மங்களத்தின் இருப்பிடமும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

8. மார்க்கண்டேயரைக் காப்பதற்காக எமதர்மனை வெறுத்தவரும், சந்திரனே தோல்விஅடையும் விதத்தில் அழகான கன்னங்களைக் கொண்டவரும், வேண்டுபவர்களுக்கு இகபர சுகசவுபாக்கியங்களை தருபவரும், மங்களத்தின் இருப்பிடமும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

9. மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் நியமத்துடன் பூஜிக்கப்பட்ட திருப்பாத கமலங்களை உடையவரும், மேரு பர்வதத்தை வில்லாக உடையவரும், வெள்ளியம்பலத்திற்கு அதிபதியான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

10. ஹாலாஸ்ய �க்ஷத்திரமான மதுரை நாயகரும், மகேஸ்வரரும், ஆலகாலம் என்னும் விஷத்தினால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடையவரும், ஸ்ரீ மீனாட்சியம்மையின் பதியானவரும், அழகிய தாண்டவத்தை உடைய மங்கள மூர்த்தியுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

குறிப்பு: இந்த ஸ்தோத்திரத்தின் முடிவில் சொல்லப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ பதஞ்சலியால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் எவர் படிக்கிறாரோ அவருக்கு நீண்டஆயுள், ஆரோக்கியம், செல்வம் இவைகளை நான்(சிவபெருமான்) கொடுக்கிறேன்.

(நன்றி- தினமலர்)