Monday, July 18, 2011

பெற்றோரே உஷார்: படிப்பில் மந்தமா உங்கள் செல்லம்

 

"என் மகனை, உயர்தர கல்விச்சேவை அளிக்கும் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறேன். ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்துகிறேன். வீட்டில் தினமும் குறைந்தது நான்கு மணி நேரம் கடுமையாக பாடம் படிக்கிறான். ஆனாலும், படிப்பில் மந்தமாகவே உள்ளான். சில பாடங்களில் தேர்ச்சி பெறவே சிரமப்படுகிறான்.
எழுத்துக் கூட்டி வாசிக்கக்கூட தெரிவதில்லை. என் மகன், "மக்காக' போய்விடுவானோ, என பயமாக இருக்கிறது டாக்டர்..." இப்படி, உளவியல் ஆலோசகரிடம் புலம்பியவர் வேறு யாருமல்ல, தனியார் கல்லூரி பேராசிரியர்; இவரது மகன் படிப்பதோ, 5ம் வகுப்பு!பேராசிரியரின் வேதனை கலந்த வார்த்தைகளை கேட்டு சிறிது புன்னகைத்த டாக்டர், அவரது மகனுடன் உரையாடி பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்துமுடித்தபின், "நீங்கள் சொல்வது போல எதுவும் நடந்துவிடாது; உங்கள் மகனுக்கு "கற்றலில் குறைபாடு' தொடர்பான "டிஸ்லெக்ஸியா'(Dyslexia) என்ற பாதிப்பு உள்ளது.
எழுத்துக்களைக் ஒன்றுகூட்டி வாசித்தல், எழுத்துக்களின் வித்தியாசத்தை அறிதல், வார்த்தையை ஒலி பிறழாமல் உச்சரித்தல், வேண்டும் போது வார்த்தைகளை நினைவுபடுத்தி திரும்பக்கூறுதல், பிழையின்றி எழுதுதல் ஆகியவற்றில் அவனுக்கு பிரச்னைகள் உள்ளன. முறையான பயிற்சி மேற்கொண்டால் நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும்' என்றுகூறி, சில ஆலோசனைகளையும் தெரிவித்தார்.இந்த பேராசிரியரை போன்றே, பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பலரும் தங்களது பிள்ளையின் படிப்பு மீது மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.பெரும்பாலான பெற்றோர், பிள்ளையின் படிப்பு மந்தமானதற்கான உண்மையான காரணத்தை அறியாதவர்களாக உள்ளனர். "வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனிக்காமல் கோட்டைவிட்டு விடுகிறான்.
ஏனோ, தானோவென்று தேர்வு எழுதுகிறான்...' என, கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும், தேர்வு விடைத்தாளில் கையெழுத்திட மறுத்து பிள்ளையை அடித்து, உதைக்கவும் செய்கின்றனர். பெற்றோரிடம் அடி வாங்கும் பிள்ளைகள், பள்ளிக்குச் செல்ல அஞ்சுகின்றனர்; தேர்வு நெருங்கினாலே நடுங்குகின்றனர்.அப்படியே தேர்வு எழுதினாலும், குறைந்த மார்க்குடன் கூடிய விடைத்தாள்களை பெற்றோரிடம் காண்பித்தால் அடிப்பார்களே,...என பீதிக்கு உள்ளாகின்றனர். பள்ளிக்குச் செல்ல மறுத்து,"வயிறு வலிக்கிறது' "தலை சுற்றுகிறது' என காரணங்களைக் கூறி பள்ளிக்குச் செல்லாமல் தவிர்க்க முனைகின்றனர்.
பதறும் பெற்றோர், பிள்ளைக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக கருதி, டாக்டரிடம் அழைத்துச் சென்று பலவிதமான பரிசோதனைகளுக்கும் உட்படுத்துகின்றனர். "வயிற்று வலி' "தலை சுற்றலுக்கான' காரணம் கண்டறியப்படாத நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்; வீட்டில் அமைதியிழப்பும் ஏற்படுகிறது.
"இதுபோன்ற நிலைக்கு காரணம், பிள்ளைகள் அல்ல; பெற்றோரே' என்கி ன்றனர், உளவியல் ஆலோசகர்கள். தங்களது பிள்ளைகளிடம் கனிவாக பேசி, கலந்துரையாடி, அவர்களது நடவடிக்கைகளை நிதானித்து கவனித்து உண்மையான காரணங்களை கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபட தவறுகின்றனர். வெறுமனே "படி, படி' என மிரட்டி அச்சுறுத்துவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
"டிஸ்லெக்ஸியா' என்றால் என்ன ? கற்றலில் குறைபாடுள்ள பிள்ளைகளின் பிரச்னைகளுக்கு, "டிஸ்லெக்ஸியா' (Dyslexia / Specific Learning Disability)) என்ற பாதிப்பே முக்கிய காரணம் என்கின்றனர், உளவியல் ஆலோசகர்கள். மொழி கற்கும், எழுதும் திறனில் குறைபாடுள்ளவர்கள், "டிஸ்லெக்ஸிக்ஸ்' என்றழைக்கப்படுகின்றனர். இந்த பாதிப்புடைய குழந்தைகளின் பேச்சு உறுப்புகள், கண் பார்வைக்கான உறுப்புகள், கேட்பதற்கான உறுப்புகள் மற்றும் மூளை உறுப்புகள் அனைத்தும் பிற குழந்தைகளின் உறுப்புகளை போன்று இயல்பாகவே இருக்கும். எனினும் வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படித்தல் மற்றும் படித்ததை நினைவில் நிறுத்தி பிழையின்றி எழுதுதல் திறன் குறைவாகவே இருக்கும். இந்த மாதிரியான குழந்தைகள் எழுத்துக் கூட்டி படிக்கவே மிகவும் சிரமப்படுவர். "டிஸ்லெக்ஸியா' என்பது நோயல்ல. மூன்று முதல் ஏழு வயது வரையுள்ள குழந்தைகளிடம் காணப்படும் கற்றலில் குறைபாடுள்ள ஒரு பாதிப்பு. இந்த பாதிப்புள்ள குழந்தைகளை உயர்கல்விச் சேவை அளிக்கும் பள்ளியில் சேர்த்தாலும், படிப்பு இயல்பான முறையில் வராது என்கின்றனர்' உளவியல் ஆராய்ச்சியாளர்கள்.
விளைவுகள்: "டிஸ்லெக்ஸியா' என்பது மூளை தொடர்பான பாதிப்புகளில் ஒன்று. பிறக்கும்போது குழந்தையின் இடது பக்க மூளையில் ஏற்படும் காயம், அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு நேரிடுகிறது. இப்பாதிப்புடைய குழந்தைகள், இடது பக்க மூளை பூரண செயல்பாடுடைய குழந்தைகளில் இருந்து கற்றல் திறனில் வேறுபடுவர். இவர்கள் எழுத்துக்களின் வித்தியாசம் மற்றும் அவற்றின் ஒலி அமைப்பை வேறுபடுத்தி பார்க்க முடியாமல் குழப்பமடைவர். உதாரணமாக, ஆங்கில எழுத்தான b யை, d என்று மாற்றி வாசிப்பர்; எழுதுவர். கணிதத்தில் 18 என்ற எண்ணை, 81 என்று மாற்றி எழுதுவர்; ஆங்கில எழுத்தான B என்பதை 8 எனவும் தவறாக எழுதுவர்; வாசிப்பர்.
எழுத்துக்கூட்டி உச்சரிப்பதிலும் தவறுகளைச் செய்வர். படித்த பாடங்களை வரிசைக் கிரமமாக மூளையில் பதிவு செய்து வைத்து, வேண்டும்போது அவற்றை நினைவுக்கு கொண்டுவருவதில், எழுதுவதில் திணறுவர். தேர்வின் போது கேள்வித்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை ஏற்கனவே பல முறை படித்திருந்தாலும், பதிலுக்கான வார்த்தைகளை, வாக்கியங்களை ஒருங்கிணைத்து எழுத சிரமப்படுவர்.படித்த பாடத்தின் வரிகள், சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்தாலும் அடுத்தடுத்த வரிகளை ஞாபகத்துக்கு கொண்டுவந்து கோர்வையாக எழுத முடியாமல் குழப்ப நிலைக்கு சென்றுவிடுவர். வகுப்பில் சக மாணவர்களை காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெறும்போது, தாழ்வு மனப் பான்மைக்கு உள்ளாவர்; அதனால், தனித்திருக்கவும் விரும்புவர்.
அறிகுறிகள் என்ன?: *பாட புத்தகங்களில் உள்ள பாடல்களை பாட முடியாமல் சிரமப்படுவர்.*வார்த்தைகளை, வாக்கியங்களை உச்சரிக்க தடுமாறுவர்; தவறாக உச்சரிப்பர்.*எழுத்து, எண்களை ஞாபகத்தில் வைத்திருக்க முடியாமல் தவிப்பர்.*வரிசைப்படி வாக்கியங்களை கோர்வையாக எழுத முடியாமல் குழப்பமடைவர்.*கதையை கேட்டு புரிந்து கொண்டாலும், கோர்வையாக கூற இயலாமல் தடுமாறுவர்.*ஆசிரியர் கேள்வி எழுப்பினால், பதில் கூற நீண்ட நேரம் எடுத்துக்கொள்வர்.*நீண்ட வார்த்தைகளை உச்சரிக்க தடுமாறுவர்.*தவறாக உச்சரித்து, தவறாக எழுதுவர்.
*குறித்த நேரத்தில் வீட்டுப்பாடத்தை முடிக்க முடியாமல் திணறுவர்.*பள்ளிக்கு செல்ல அஞ்சி, உடல் உபாதைகளை கூறுவர்.*பேசியதை, எழுதியதை அடிக்கடி மறந்து விடுவர்.*பாடம் படிக்கும் போது வார்த்தைகளை விட்டுவிட்டு படிப்பர்.*கணிதக் குறியீடுகளை நினைவில் நிறுத்த இயலாமல் குழம்புவர்."டிஸ்லெக்ஸியா' பாதிப்புடைய குழந்தைகள், தங்களது இயலாமையை இப்படி வெளிப்படுத்துவர்...*என்னால் நன்றாக சிந்திக்க முடிகிறது; ஆனால், வார்த்தை களை எழுத முடியவில்லை.*எவ்வளவுதான் படித்தாலும், மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது.*ஆசிரியர் நடத்தும் பாடம் புரிவதில்லை; புரிந்தாலும் மறந்துபோகிறது.*அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறது.*குறித்த நேரத்தில் பாடங்களை படித்து முடிக்க முடியவில்லை.*கணிதத்தில் கழித்தல், கூட்டல், வகுத்தல் வழிமுறைகளை உட்கிரகிக்க முடிவதில்லை என, புலம்புவார்கள்.குழந்தைகள் இதுபோன்று அடிக்கடி காரணங்களை கூறும்போது, அவர்களுக்குள்ள "டிஸ்லெக்ஸியா' பாதிப்பை பெற்றோரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு அறியும் பெற்றோர், குழந்தைகளை நிர்வகிப்பதில் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். பாதிப்பில் இருந்து குழந்தையை மீட்டெடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள உடனடியாக உளவியல் ஆலோசகர்களை அணுகுவது அவசியம்.
"கவலை வேண்டாம்; பயிற்சி இருக்கு':
கோவையில் "டிஸ்லெக்ஸிக்ஸ்' மாணவ, மாணவியருக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தும் மருத்துவ உளவியல் ஆலோசகர் டாக்டர் லட்சுமணன் கூறியதாவது:ஒரு குழந்தை "டிஸ்லெக் ஸியா'வால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய, இரண்டு மணி நேரம் தேவை.
முதலில், குழந்தையின் அறிவுத்திறனை பரிசோதிப்போம். அதன்பின், என்ன காரணத்தால் கற்றலில் குறைபாடு உள்ளது என, ஆராய்கிறோம். இவர்களுக்கான பாதிப்பை, "டிஸ்லெக்ஸியா' என்கிறோம். சில குழந்தைகளுக்கு எழுதுதலில் பிரச்னை இருக்கும்; இவர்களுக் கான பாதிப்பை, "டிஸ்கிராபியா' (Disgraphia) என்கிறோம். "டிஸ்கிரா பியா' என்றால், எழுதுவதில் குறைபாடுள்ளது என்று பொருள். சில குழந்தைகள் கணக்கு போடுவதில் பின்தங்கியிருப்பர்; இவர்களுக்குள்ள பாதிப்பை "டிஸ்கால் குலியா' (Disgraphia) என்கிறோம்.
ஆசிரியர்கள், பள்ளியில் பாடம் நடத்துகின்றனர். இதற்கு பார்த்தல், கேட்டல் இருந்தால் போதுமானது. ஆனால், "டிஸ்லெக்ஸிக்ஸ்' மாணவர் களுக்கு நாங்கள் நடத்தும் படிப்பு முறை (Leaqtning Stxtle ) முற்றிலும் மாறுபட்டது. குழந்தைகளின் பார்த்தல், கேட்டல் முறைகளை மட்டும் பயன்படுத்துவதில்லை. தொடுதல், வாசனை, சுவை ஆகியவற்றுடன் புலன் சம்பந்தப் பட்ட போதனை முறைகளை கை யாண்டு கற்றல் திறனை அதிகப் படுத்துகிறாம். உதாரணமாக, ஆங்கில எழுத்துக்களை வெறுமனே போர்டில் எழுதிப்போடுவ தில்லை. ஒரு எழுத்தை விரல்களால் உருவகப் படுத்தி காட்டி பாடம் நடத்துகிறோம். அதை பார்க்கும் குழந்தைகள், அந்த எழுத்துக்களை எழுதும்போது சந்தேகம் இருப்பின், நாங்கள் முன்பு உருவகப்படுத்தி யவாரே, தங்களது விரல்களால் அந்த எழுத்தை உருவகப்படுத்தி பார்த்து சரியாக எழுதி விடுவார்கள். தொடுமணல் முறையிலும் பாடம் நடத்துகிறோம். அதாவது, கூடையில் மணல் பரப்பி எழுத்துக்களை அதில் எழுதிக் காட்டியும் பாடம் நடத்துகிறோம். தீவிர பாதிப்புடைய மாணவர்களுக்கு சிறப்பு பாடவகுப்புகளையும் நடத்துகிறோம். கற்றலில் குறைபாடு உடைய மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வில் சில சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன; இதற்கான அரசு உத்தரவும் உள்ளது. "டிஸ்லெக்ஸிக்ஸ்' மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுதம்போது கூடுதலாக அரை மணி நேரம் அனுமதிக்கப்படுகிறது; எழுத்துப் பிழைகளுக்கு மதிப்பெண் குறைத்து மதிப்பிடப்படுவதில்லை; கணித தேர்வின்போது "கால்குலேட்டர்' பயன்படுத்த சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது; ஆங்கிலம் வழியில் கல்விகற்கும் மாணவர்கள் தமிழ் மொழித்தேர்வை எழுதுவதிலும், தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி தேர்வில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையை பெற தகுதியான மாணவ, மாணவியர் மனநல டாக்டரிடம், மருத்துவ உளவியல் ஆலோசகரிடமும் சான்று பெற்று, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் தேர்வுக்கு முன் சமர்ப்பித்தால், சிறப்பு சலுகைகளை பெற முடியும்.ஆனால், டிஸ்லெக்ஸியா பாதித்த மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. முறையான பயிற்சி பெற்றால், "டிஸ்லெக்ஸியா' பாதிப்பிலிருந்து குழந்தைகள் விடுபடலாம். இதுதொடர்பான உளவியல் ஆலோசனைகளுக்கு 98420 06144 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, டாக்டர் லட்சுமணன் தெரிவித்தார்."பிறப்பு அதிர்ச்சியே முக்கிய காரணம்'
மன நல டாக்டர் மணி கூறியதாவது:"டிஸ்லெக்ஸியா' பாதிப்பு, பிறப்பின்போது குழந்தைக்கு நேரிடும் ஒருவித அதிர்ச்சியின் காரணமாக (Birth Trauma, Birth Asphyxia) ஏற்படுகிறது. பேறுகால தாய்மார்களின் "பனிக்குடம்' உடையும்போதும், சிசுவின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றும் போதும், மூளைக்கு சப்ளையாகக்கூடிய ஆக்ஸிஜன் தடைபடுகிறது. இதனால், மூச்சுக்குழல் அடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மூளை நரம்பு மண்டலத்தில் பரிசோதனையில் கண்டறிய முடியாதபடி பாதிப்பும் உண்டாகிறது. தவிர, பிரசவ நிகழ்வின்போது குழந்தையின் தலைப்பகுதியில் காயம் (ஆபரேஷனின் போது), வலிப்பு ஏற்படும் போதும் கூட "டிஸ்லெக்ஸியா' பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு பெற்றோர் வழி பரம்பரையாக குழந்தைகளுக்கு வரவும் வாய்ப்புள்ளதாக நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.இளம் வயது குழந்தைகளுக்கு எதிர்பாராதவிதமாக தலையில் அடிபட்டாலும் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் மூளையில் அதாவது, நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. "டிஸ்லெக்ஸியா' பாதித்த குழந்தைகளுக்கு மூளையில் பெரிய அளவிலான பாதிப்பு அல்லது குறைகள் இருப்பதாக சொல்ல முடியாது.
மூளைப்பகுதியை "ஸ்கேன்' செய்து பார்த்தாலும் "நார்மலாகவே' இருக்கும். நரம்பு மண்டலத்தின் மேல் குறிப்பிட்ட "சர்க்யூட்'டில் குறைபாடு ஏற்பட்டிருக்கும்போது (Improper Development Of Sound Symbol Correspondents) வார்த்தைகள் கோர்வையாக வராது; விட்டு விட்டு வரும். பேசும்போதும், எழுதும்போதும் வார்த்தைகளை தேடுவார்கள்; படிப்பில் நாட்டமிருக் காது; அதேவேளையில், அறிவுத் திறன் மிகவும் நன்றாகவே இருக்கும்.மற்றவர்களை போன்று சராசரியான அல்லது மேம்பட்ட நுண்ணறிவு படைத்தவர்களாக இருப்பர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளையும், "டிஸ்லெக் ஸியா'வால் பாதித்த குழந்தை களையும் ஒன்றாக கருத முடியாது; முற்றிலும் மாறுபட்டவர்கள். பள்ளி மாணவ, மாணவியரில் 10 முதல் 15 சதவீத பேருக்கு ஏதோ ஒரு விதத்தில் "டிஸ்லெக்ஸியா' இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா பள்ளிகளிலும் இதுபோன்ற பாதிப்புடைய மாணவ, மாணவியர் உள்ளனர். "டிஸ்லெக்ஸியா' பாதிப்புக்கு எவ்விதமான மருந்து, மாத்திரைகளும் கிடையாது. டிஸ்லெக்ஸியா தொடர் பான மருத்துவ ஆலோசனைகளுக்கு 98422 13043 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, டாக்டர் மணி தெரிவித்தார்.
"பிற மாணவர்களுடன் ஒப்பிடாதீர்கள்';மனநலம் மற்றும் குடும்ப நல ஆலோசகர் கருப்புசாமி கூறியதாவது:கற்றலில் குறைபாடுடைய குழந் தைகள், மற்ற சராசரி குழந்தைகளின் அறிவுத்திறனை காட்டிலும் புத்தி கூர்மையானவர்களாக, தனித்திறன் பெற்றவர்களாக இருப்பர். கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, அவர்கள் மீது ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தீவிர கவனிப்பும், கண்காணிப்பும் மேற்கொண்டு அந்த குழந்தைகளின் குறைபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். கல்விமுறை சாராத பயிற்சிகளை அளிக்கலாம். அவர்களது ஆசை, நோக்கம், எண்ணம், கொள்கை ஆகியவற்றை கண்டறிந்து, அதற்கேற்ப அவர்கள் விரும்பும் துறையில் பயிற்சி அளிக்க வேண்டும். அந்த மாதிரியான பயிற்சிகள் விளையாட்டுத்துறை சார்ந்ததாகவும், தொழில் சார்ந்ததாகவும் கூட இருக்கலாம். இப்பணியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு மகத் தானது. அவ்வாறு முறையான பயிற்சி அளித்தால், கற்றலில் குறை பாடுள்ள குழந்தைகளும் பிற்காலத்தில் சாதனையாளராக உருவாவர். அவ்வாறில்லாமல் தாழ்த்தி பேசுவது, பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது, அவர்களுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையையே ஏற்படுத்தும்.இவ்வாறு, கருப்புசாமி தெரிவித்தார்.
"அச்சம் வேண்டாம்... மேதைகளும் உள்ளனர்:"டிஸ்லெக்ஸியா' பாதித்த மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடுமோ என்ற அச்சம் பெற்றோருக்கு தேவையில்லை' என்கிறார், மருத்துவ உளவியல் ஆலோசகர் லட்சுமணன். அவர் கூறுகையில், "கணித மேதை ராமானுஜர், அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிஸன் மற்றும் அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன் உள்ளிட்டோரும் கூட "டிஸ்லெக்ஸியா'வால் பாதிக்கப்பட்டவர்கள்தான். தங்களது அபரிமிதமான அறிவால் மேதைகளாக பளிச்சிட்டார்கள்.
இவர்களது வலது பக்க மூளை "கிரியேட்டிவ்' சார்ந்த விஷயங்களில் உச்சகட்ட நிலையில் செயல்பட்டுள்ளது. அதனால், "டிஸ்லெக்ஸியா' உள்ளவர்களின் எதிர்காலம் எந்த விதத்திலும் பாதிக்கப் படுவதில்லை. புதியவற்றை உருவாக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் மனிதனின் வலது மூளை "பக்க பலமாக' உள்ளது. இடது மூளை மொழித்திறன் மற்றும் கற்றல் தொடர்பானவற்றை கவனி க்கிறது. எனவே, பிள்ளைகளின் படிப்பில் பின்னடைவை பார்த்து, எதிர்கால வாழ்க்கை இருண்டு விட்டதாக பெற்றோர் வேதனைப்பட தேவையில்லை.- ‌கே.விஜயகுமார் -

 

(நன்றி - தினமலர்)