Tuesday, May 5, 2009

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

fpnmix_33628481627

tblfpnnews_78402346373

மங்கலநாண் சூடும் மதுரை மீனாட்சி: மதுரையில் மங்கல மீனாட்சி மங்கலநாண் சூடிக்கொண்ட நன்னாள் இன்று. வீட்டில் நம் பெற்றவர்களுக்கு நாம் சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாக விளங்கும் நம் அன்னை மீனாட்சிக்கு, அவளது பிள்ளைகளான நாமெல்லாம் இன்று திருக்கல்யாணம் நடத்தி மகிழ்ந்தோம்.

மலையத்துவஜனின் மகளாக அவதரித்த தடாதகைப் பிராட்டிக்கு பட்டம் சூட்டினான் மன்னன். எட்டுத்திக்கும் வெற்றி நிலைநாட்ட திக்விஜயம் புறப்பட்டாள் தேவி. கயிலைநாதனைக் கண்டாள். தனக்குஉரிய மணாளன் இவரே என்று அறிந்தாள். நல்லநாளில் முகூர்த்த வேளையில் ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்றெடுத்த அம்மைக்கும், அப்பனுக்கும்திருக்கல்யாண வைபவத்தை நிகழ்த்த மதுரையம்பதியில் எல்லா மக்களும் கூடினார்கள். மங்கல வாத்தியங்கள் முழங்க, சொக்கேசனின் கரம் பிடித்தாள்.

சக்தியில்லாமல் சிவமில்லை. சிவமில்லாமல் சக்தியில்லை. சக்தியும் சிவமும் இணைந்தால் தானே உலக இயக்கமே நடக்கிறது. இதை நமக்கு உணர்த்தவே அம்மையப்பராக இருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்துகிறோம்.

உலக உயிர்க்குலங்கள் அனைத்தும் உமையவளின் பிள்ளைகள். ""என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே'' என்பார் மணிவாசகப்பெருமான். ஆம்! நாம் கண்கள் பெற்ற பயனை, இன்று அம்மையப்பரை திருமணக்கோலத்தில் கண்டு மகிழ்ந்ததன் மூலம் அடைந்திருக்கிறோம். அபிராமி பட்டர் தன் அந்தாதியில், ""கண்களிக்கும்படி கடம்பாடவியில் (கடம்பவனமாகிய மதுரையில்) கண்டேன்'' என்று குறிப்பிடுகிறார். இத்தலத்தில் நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தையே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கருத வேண்டிஉள்ளது.

உமையவளுக்கு ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொருவிதமான ரூப லாவண்யம் உண்டு. அதில் மதுரைக்குரிய தனிச்சிறப்பு திருமணக்கோலம் தான். திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பெண்மைக்கே உரிய நளினமும் நாணமும் கொண்ட மீனாட்சியம்மையின் திருக் கரத்தை கம்பீரமாய் மாப்பிள்ளை மிடுக்கோடு நிற்கும், சொக்கநாதப்பெருமானின் திருக்கரத்தோடு சேர்க்கும் திருமணக்கோலம் உலகப்பிரசித்தம்.

மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் திருப்பூட்டும் நல்ல நேரத்தில் அவரவர் வீடுகளில் பெண்கள் எல்லோரும் திருமாங்கல்யச்சரடு மாற்றிக் கொள்வது தொன்று தொட்டு வருகின்ற மரபாகும். எல்லோராலும் கோயிலுக்குள் நுழைந்து மணக்கோலம் காண்பதென்பது நடக்கிற ஒன்றா! இதற்காகவே, புதுமாப்பிள்ளை சுந்தரேசர் இன்று இரவு யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் வலம் வந்து அருள் செய்வார்கள். நாம் நெரிசல் இல்லாமல் நமக்கு நாமே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு அவர்களை வணங்கி மகிழ்வோமே!

( நன்றி - தினமலர்)

No comments: