Saturday, April 18, 2009

சித்தருக்கு பூப்பந்தல் வழிபாடு (மாணிக்க மூக்குத்தி மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் தொடர்ச்சி.. )

sirapukatturainews_67579287291

18 சித்தர்களின் தலைமை சித்தராக சிவனே விளங்குகிறார். இதனால் அவர், "எல்லாம் வல்ல சித்தர்' என்று பெயர் பெற்றார். இவருக்கு இங்கு தனிசன்னதி உள்ளது. சித்தருக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. இவரது சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. சிவனே இங்கு சித்தராக இருப்பதால் இவரது சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்கு காத்திருக்கும்விதமாக, செவி சாய்த்து காட்சியளிப்பது விசேஷம்.

உபதேச தெட்சிணாமூர்த்தி முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு சிவன், அஷ்டமாசித்திகளை உபதேசம் செய்தார். அவர்கள் அதனை மறந்து விட்டதால், கல்லாக மாறினர். தங்களுக்கு விமோசனம் வேண்டி பட்டமங்கலம் (சிவகங்கை மாவட்டம்) என்னும் தலத்தில் தவமிருந்தனர். அவர்களுக்கு இத்தலத்து சிவன், குருவாக இருந்து அஷ்டமாசித்திகளை மீண்டும் உபதேசித்தார். இவர் மதுரையில் சிவன் சன்னதி கோஷ்டத்தில் "உபதேச தெட்சிணாமூர்த்தி'யாக காட்சி தருகிறார். இவரை "வேததெட்சிணாமூர்த்தி' என்றும் அழைக்கிறார்கள்.

கொடிமரத்தில் சம்பந்தர்: சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் விநாயகர், நந்தி உருவங்கள் பொறிக்கப்படுவது வாடிக்கை. ஆனால் சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் உண்டானபோது, சம்பந்தர் சிவனை வேண்டி திருநீற்றுப்பதிகம் பாடி மடைப்பள்ளி சாம்பலை கொடுத்து குணமாக்கினார்.

சமண மதத்தினருடன் போட்டியிட்டு அவர்களை வென்று மீண்டும் சைவ சமயத்தை நிலைநாட்டினார். இவ்வாறு மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தவர் சம்பந்தர். எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.

(நன்றி-தினமலர்)

No comments: