Tuesday, April 28, 2009

மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா ஸ்பெஷல்

tblfpnnews_80023920537

மூன்றாம் நாள் திருவிழா நடத்துவது ஏன்: நமது வினைகளை (செயல்கள்) மூன்றாகப் பிரிக்கலாம். ஆன்மிகத் தில், இது, சஞ்சித வினை, பிராரத்துவ வினை, ஆகாமிய வினை என்பர். சஞ்சிதம் என்றால் நாம் இதுவரை பிறந்த பிறவிகளில் செய்த நற்செயல் மற்றும் தீயசெயல்களின் தொகுப்பாகும். பிராரத்துவம் என்பது சஞ்சிதத் தொகுப்பில் இருந்து இந்தப் பிறவிக்கென இறைவன் எடுத்துக் கொடுத்த ஒரு பகுதி. ஆகாமியம் என்பது, இப்போது நாம் புதிதாகச் செய்யும் நற்செயல் மற்றும் தீயசெயல்களின் சேர்க்கையாகும். நல்லது செய்தால் தேவர் முதலான பிறப்புகளை அடைய வேண்டி வரும்.

தேவராக இருந்தாலும் அசுரர்களால் துன்பத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். கெட்டது செய்தால் இந்த பூமியில் மீண்டும் கேவலமான பிறப்பைச் சந்தித்து இன்னும் துன்பப்பட வேண்டியிருக்கும். எனவே இவ்வகையான மூன்று செயல்களின் பலன்களில் இருந்தும் விடுதலை வேண்டும் என அன்னை மீனாட்சியிடமும், சுந்தரேஸ்வரரிடமும் பிரார்த்திக்க வேண்டும். ஐயம், விபரீதம், மயக்கம் என மூவகை புத்தி மனிதனுக்கு உண்டு. சந்தேகப்பட்டால் விபரீதம் நிகழும். இதனால் அறிவு மயங்கி தவறான முடிவுக்கு வரும். இந்த ஆபத்தான போக்கில் இருந்து புத்தியை நல்வழியில் திருப்பும்படி இறைவனிடம் கேட்க வேண்டும். சாந்தம், மிருககுணம், சோம்பல் என குணங்கள் மூவகைப்படும். பின் இரண்டு குணங்களும் ஆபத்தைத் தரும் என்பது அனைவரும் அறிந்தது தான்! அதிகமாக சாந்தமாக இருப்பதும் உயிருக்கு ஆபத்தே. எனவே, இந்த குணங்களை விடுத்து, இறைவனை அடைய வேண்டும் என்ற ஒரே குணம் மட்டும் போது மென மீனாட்சியிடம் கேட்க வேண்டும்.

முற்பிறப்பு, இப்பிறப்பு , வரும் பிறப்பு ஆகிய பிறப்புகளில் இருந்தும், மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூன்று ஆசைகளில் இருந் தும் விடுபட வேண்டும் என்ற ஞானத்தைக் கேட்க வேண்டும். மூன்றாம் திருநாள் உணர்த்தும் தத்துவம் இதுவே. இன்று அன்னை மீனாட்சி காமதேனு வாகனத்திலும், சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும் வருகின்றனர். காமதேனு எதைக் கேட்டாலும் கொடுப்பது. மேற்கண்ட மூவகை துன்பங்களும் அகல வேண்டும் என்று அம்பாளிடம் கேட்டால் நிச்சயமாய் அந்த வரத்தை அருள்வாள்.

(நன்றி - தினமலர்)

No comments: