Saturday, April 18, 2009

கம்பத்தடி மண்டபம் (மாணிக்க மூக்குத்தி மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் தொடர்ச்சி.. )

sirapukatturainews_73984926941 சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள இந்த மண்டபத்தில் கயிலாசரூடர், சந்திரசேகர், இடபாந்திகர், லிங்கோத்பவர், சாமதகனர், நடராஜர், சுகாசனர், காலசம்ஹாரர், மார்க்கண்டேயர், சோமசுந்தரர், கலியாணசுந்தரர், திரிபுராந்தகர், சங்கர நாராயணர், அர்த்தநாரீஸ்வரர், இடபாரூடர், ஏகபாதமூர்த்தி, சக்ரதரர், சலநீதரானுக்கிரர், தட்சிணாமூர்த்தி, கஜசம்ஹாரர், சண்டே சானுக்கிரர், சோமசுந்தரர், கிராதர்ச்சுனர், உருத்திரர், பிட்சாடனர் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன.

ஆயிரங்கால் மண்டபம்: மீனாட்சி அம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் சிறப்பு பெற்றது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாரூர், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திருநெல்வேலி ஆகிய கோயில்களுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஆயிரங்கால் மண்டபம் பெற்ற சிறப்புடையது.

நாயக்க மன்னர்களின் தளவாயாக இருந்த அரியநாத முதலியார் இந்த மண்டபத்தை அமைத்தார். தொன்மையான பொருட்களின் களஞ்சியமாக இந்த கலைக்கூடம் இருக்கிறது. கண்ணப்பர், அரிச்சந்திரன், குறவன், குறத்தி உருவச்சிலைகள், இசைத்தூண்கள், அன்னத்தின்மீது அமர்ந்த ரதி ஆகிய சிலைகள் குறிப்பிடத்தக்கது.

புதுமண்டப சுருக்குப்பை ரகசியம் : "நீ தர்மத்தை காப்பாயானால் தர்மம் உன்னை காக்கும்' என்பர். தொழில் மீது பக்தியுடையவன், தன் தொழில்தர்மத்தையும், பழமையையும் காப்பதில் அக்கறை உடையவனாக இருக்க வேண்டும். இதை நிரூபிக்கும் வகையில், புதுமண்டபத்திலுள்ள தையல் கலைஞர்கள் ஒரு வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.

அவர்கள் கிராமத்துப் பெண்மணிகளின் "மணிபர்ஸான' சுருக்குப்பை தைக்கும் போது, பையினுள் சில்லரை காசு வைத்த பிறகு தான் தைக்க ஆரம்பிப்பார்கள். தங்களிடம் அவசரத்துக்கு சில்லரை இல்லாவிட்டாலும், யாரிடமாவது வாங்கி வைத்த பிறகு தான் தைப்பார்கள். இப்படி ஒரு வித்தியாசமான தொழில் தர்மம்! இப்போதும், சில கடைகளில் மணிபர்ஸ் வாங்குபவர்களுக்கு காசுகளை உள்ளே வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருக்கிறது.

பொற்றாமரைக்குளம்

sirapukatturainews_32600039244

கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு காலத்தில் தங்கத்தாமரைகள் பூத்ததாகவும் இதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் சொல்வர். இதன் அகலம் 165 அடி. நீளம் 240 அடி. பரப்பரளவு ஒரு ஏக்கர். மீனாட்சிஅம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பே இந்த குளம் அமைந்துவிட்டது.

சுந்தரேஸ்வரருக்கு கருவறை கட்டிய பாண்டியனின் உருவம் இந்த குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப் பட்டுள்ளது. எனவே இந்த படித்துறை "பாண்டியன் படித்துறை' எனப்படுகிறது. இந்த குளத்தில் தவளையும் மீனும் இருப்பதுஇல்லை. குளத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளின் தங்க கோபுரங்களை வழிபடலாம்.

மாதப்பெயரில் வீதிகள்: மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிற கோயில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின்போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருளுகிறார் களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது.

இதில் ஆவணி வீதி மட்டும், மூல நட்சத்திரத்துடன் இணைந்து"ஆவணி மூல வீதி' என அழைக் கப்படுகிறது. சிவனின் திரு விளையாடல்களில் "பிட்டுக்கு மண் சுமந்த லீலை' இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே, ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமி வீதியை சுற்றி வருகிறார்.

ஒரு நாள் மட்டும் யானை பவனி: மதுரை சொக்கநாதருக்கு பல வாகனங்கள் உள்ளன. ஆனால், வெள்ளி ஐராவத (யானை) வாகனம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த வாகனத்தில் திருக்கல்யாணத்தன்று மாலையில் மட்டும் எழுந்தருள்வார். இந்த யானையை மையப்படுத்தி,

"யானை யானை அழகர் யானை
ஆடுமாம் சொக்கர் கொம்பானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை''
என்ற குழந்தை தாலாட்டுப் பாடலும் இருக்கிறது.

முதல் திருவிளையாடல்: மதுரையில் சிவபெருமான், அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பவுர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிக்காலத்தில் சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.

(நன்றி-தினமலர்)

No comments: