Saturday, April 18, 2009

48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை (மாணிக்க மூக்குத்தி மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் தொடர்ச்சி.. )

sirapukatturainews_81890505553

மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படை யெடுப்பின் போது மீனாட்சி அம்மன் திருவுருவத்தையும், சுந்தரேஸ்வரரையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன்மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர்.

கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்தச்சிலைதான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி உள்ளது. சுந்தரேஸ்வரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது.

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறை யை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டுஇருந்தது. இது அதிசயமாக கருதப்பட்டது.

அஷ்டசக்தி மண்டபம்: கிழக்கு கோபுரத்தின் வழியாக அம்மன் சன்னதிக்கு நுழையும்போது முதலில் வரும் மண்டபமே அஷ்டசக்தி மண்டபமாகும். இதில் உள்ள எட்டு தூண்களில் கவுமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, எக்குரூபணி, ஷியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய எட்டு சக்திகள் காட்சியளிக்கின்றனர்.

இவர்களை வணங்குவோர் தைரியமாக இருப்பர் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் இந்த மண்டபம் அன்னதான மண்டபமாக இருந்தது. பிற்காலத்தில் ஆவணி மூல வீதி ஏற்பட்ட பிறகு தெற்கு ஆவணி மூலவீதியில் அமைக்கப்பட்ட சோற்றுக்கடைகளில் தானம் செய்யப்பட்டது. எனவே இங்குள்ள ஒரு தெருவுக்கு சோற்றுக்கடைத்தெரு என்ற பெயர் இப்போதும் இருக்கிறது.

மீனாட்சி நாயக்கர் மண்டபம்: அஷ்டசக்தி மண்டபத்தை அடுத்து அமைந்துள்ளது மீனாட்சி நாயக்கர் மண்டபம். இதன் நீளம் 160 அடி. ஆறு வரிசைகளாக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் மேல் விட்டத்தில் ராசி கட்டம் பொறிக்கப்பட்டுள்ளது. திருமலைநாயக்கரின் அமைச்சரான மீனாட்சி நாயக்கர் கட்டியதால் இந்த பெயர் பெற்றது.

முதலி மண்டபம்: இந்த மண்டபத்தை கடந்தை முதலியார் கட்டினார். சிவபெருமான் பிட்சாடணராக இங்கு காட்சியளிக்கிறார். மோகினியின் சிற்பத்தில் ஆடை மடிப்புகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஊஞ்சல் மண்டபம்: அம்மன் சன்னதி நுழைவு வாயிலை ஒட்டி ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ராணி மங்கம்மாள் இதை கட்டினார். ஊஞ்சல் மண்டபத்தின் எதிரில் தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் மங்கம்மாள் மற்றும் நாயக்க அரசர்களின் தளவாயான ராமப்ப அய்யர் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சங்கிலி மண்டபம்: அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் சங்கிலி மண்டபம் உள்ளது. இதில் சுக்ரீவன், வாலி, கிராதார்ச்சுனர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. சொக்கநாதர் கருவறைக்கு வடக்கே கரியமாணிக்க பெருமாள் கோயில் இருந்ததாக ஒரு தகவல் உண்டு. அந்த கோயிலின் தூண்களாக இவை இருக்கக்கூடும் என ஒரு கருத்து நிலவுகிறது. நாயக்க மன்னர்கள் இங்கு ஆண்டுள்ளதால் அவர்களும் இதை நிறுவியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

நூற்றுக்கால் மண்டபம்: இந்த மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. நடராஜ பெருமான் இங்கு நடனம் ஆடுகிறார். தற்போது இந்த மண்டபம் தியான மண்டபமாக உள்ளது. சுவாமி சன்னதிக்கு வெளியே கொடிமரத்தின் அருகே அமைந்துள்ளது. 1526ல் சின்னப்ப நாயக்கர் இதை கட்டினார்.

புது மண்டபம்: கிழக்கு கோபுரத்தின் எதிரே உள்ள மண்டபத்தை "புது மண்டபம்' என்பர். இதன் உண்மை பெயர் "வசந்த மண்டபம்'. கோடைக்காலத்தில் இந்த மண்டபத்தின் இரு பக்கமும் உள்ள பள்ளங்களில் தண்ணீரை நிரப்புவர். அப்போது மண்டபத்திற்கு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு குளிர்ச்சியான காற்று கிடைக்கும்.

அனேகமாக இந்த மண்டபம்தான் மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அதனால் "புது மண்டபம்' என்ற பெயர் உருவாகியிருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. 133 அடி நீளமும் 105 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபம் 25 அடி உயரமுள்ள 500 தூண்களுடன் கட்டப் பட்டது. திருவிழா காலங்களில் இந்த மண்டபத்தில்தான் சுவாமி எழுந்தருளி இருக்கிறார்.

ராவண அனுக்ரஹ மூர்த்தி, திரிபுராந்தகர், காளி, கல்யாண சுந்தரேஸ்வரர், பிரம்மன், இந்திரன், அர்த்தநாரீஸ்வரர், ஊர்த்துவதாண்டவர், சங்கரநாராயணர், அதிகார நந்தி, கருங்குருவிக்கு உபதேசித்த லீலை, கல்யானைக்கு கரும்பு கொடுத்தது, பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்தது, புலியை மான்குட்டிகளுக்கு பால்கொடுக்கச் செய்த லீலை, வியாக்ரபாதர், பதஞ்சலி, வாயற்காவலர்கள், தடாதகை பிராட்டி, சுந்தரேஸ்வரர், சந்திரன், சூரியன், ஏகபாதமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, குதிரை வீரர்கள், யாழிகள், மனைவியருடன் திருமலை நாயக்கர் மற்றும் ஒன்பது நாயக்க மன்னர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

(நன்றி-தினமலர்)

No comments: