Thursday, October 8, 2009

ன்புடையீர்,

சமீப காலமாக பங்குச்சந்தை உயர்ந்து வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இம்மாதிரியான நேரங்களில் பங்குச்சந்தையைப்பற்றிய அடிப்படை தெரியாதவர்கள்கூட பங்குச்சந்தையின் எழுச்சி காரணமாக அதில் முதலிட விரும்புவார்கள். ஒவ்வொரு முறையும் இம்மாதிரியான எழுச்சிமிக்க நேரத்தில் சந்தையின் ஆர்வத்தில் சிலர் நேரடியான முதலீட்டை மேற்க்கொள்ளாமல் சில இடைத்தரகர்கள் அல்லது அவர்களின் நிறுவனங்களின் மூலம் முதலீட்டை மேற்கொள்கிறார்கள். இவர்களுடைய ஆர்வத்தைப் பயன்படுத்தி சில நபர்கள் இவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, விரைவில் பணத்தை பன்மடங்காக பெருக்கித்தருவதாகவோ அல்லது மாதா மாதம் ஒரு பெரிய தொகையை வட்டிபோல தருவதாகவோ கூறிவிட்டு, அவர்களிடமிருந்து பெற்ற தொகையை பங்குகளில் முதலிடுவதை விடுத்து, தினவர்த்தகத்தின் மூலம் முறைகேடுகளாக பயன்படுத்தி பணத்தை தொலைக்கும் சம்பவம் நாள்தோறும் செய்திதாள்களில் வந்தவண்ணமே இருக்கிறது. சமீப இரண்டொரு நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் சென்னையிலும், கோவையிலும் நடந்திருப்பது, படித்த, அனைத்து வசதிகளும், தொழில்நுட்பமும் உள்ள மேல்தட்டு மக்களே ஏமாந்திருப்பது, எவ்வித வசதி வாய்ப்பும் இல்லாத கிராமத்து மக்களை நினைக்கும்போது அதிர்ச்சியளிக்கின்றது.

பங்குச்சந்தையில் முதலிடுவது என்பது ஒரு மாயாஜால வித்தையல்ல. மற்ற முதலீடுகள்போல இதுவும் ஒரு எளிதான விஷயம்தான். இந்தியப்பங்குச்சந்தையில் இந்தியராக பிறந்த யார்வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நலன்களை கருத்தில்கொண்டே சில விதிமுறைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளது.

பங்குச்சந்தைகளில் ஈடுபட இடைத்தரகர்கள் எதற்கு? நீங்களே மிக எளிதாக பான்கார்டு விண்ணப்பிக்கலாம். எளிதான முறையில் டீமேட், வங்கி மற்றும் டிரேடிங் கணக்குகளை ஆரம்பிக்கலாமே. இவற்றிற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலைப்பார்ப்பவர்களே உங்களுக்கு உதவுவார்களே! இப்படி இருக்கும்போது இடைத்தரகர்களை ஏன் நாடுகிறார்கள் என்பதைதான் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

தகவல் தொடர்புகள் அதிகமில்லாத காலத்தில் ஏமாந்தார்கள் என்றால் சரி, இப்போதும் இந்நிலையே தொடர வேண்டுமா? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.

தமிழில் பங்குச்சந்தையைப்பற்றி விழிப்புணர்ச்சி ஏற்ப்பட பல வலைப்பூக்களை மிக சிறப்பாக செய்து வருகிறார்கள். இவர்கள் தொலைபேசி மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும், சாட் செய்வதன் மூலமாகவும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எல்லாம் அவர்கள் அனுபவங்களில் மூலம் நிவர்த்தி செய்கிறார்கள். இன்னும் சிலர்கள் சிறிய அளவிலான கட்டண சேவையின் மூலம் மிகச்சிறந்த சேவை வழங்கி வருகிறார்கள். இவ்வாறு உதவி செய்வதற்கு ஆளாளுக்கு போட்டிபோட்டுக் கொண்டு உதவும் நிலையில் இடைத்தரகர்களின் நிறுவங்கள் மூலம் ஏமாறவேண்டாமே!

பங்குச்சந்தையில் முதலிட வேண்டும் உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறோம். ஆனால் பங்குச்சந்தையில் ஈடுபடுமுன் அதன் அடிப்படை, சாதக பாதகங்கள், ஆபத்து ஆகிய விஷயங்களை கவனத்தில் கொண்டே நேரடியான முதலீட்டில் ஈடுபட வேண்டும். உங்களிடம் உள்ள உபரி பணத்தை மட்டுமே பங்குச்சந்தையில் முதலிட வேண்டும். எக்காலத்திலும் கடன் வாங்கி பங்குச்சந்தையில் ஈடுபடாதீர்கள். நீங்கள் பங்குச்சந்தையில் முதன்முதலில் ஈடுபடும்போதும்போது மியூச்சுவல் பண்டுகளில் உங்கள் முதலீட்டை துவக்குங்கள்.

வாழ்த்துக்கள்.

தகவல் :-
நன்றி

திரு.ஜாஃபர். அவர்களுக்கு

http://sharedirect.blogspot.c0m

No comments: