Saturday, May 9, 2009
Friday, May 8, 2009
பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் அழகர்
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி காலை 7.10 மணிக்கு நடந்தது. பக்தர்கள் நேர்த்தி கடனாக ஆட்டம், பாட்டத்துடன் தண்ணீர் பீய்ச்சி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.,26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு பிறகு மே 7ல் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். நேற்று காலை மூன்று மாவடியில் அவரை பக்தர்கள் எதிர்க்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது. இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருளினார். அதிகாலை திருமஞ்சனம் நடந்தது. பின் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள, அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.
அங்கிருந்து தமுக்கம் கருப்பணசுவாமி கோயிலுக்கு வந்த அழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின் தங்க குதிரையில் ஒவ்வொரு மண்டக படிகளிலும் சென்று வந்தார். இதற்கிடையே அழகரை வரவேற்க வெள்ளி குதிரையில் வீரராகவ பெருமாள் காலை 6.50 மணிக்கு ஆற்றுக்கு வந்தார்.
காலை 7.10 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி "கோவிந்தா... கோவிந்தா...' என்று பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே வைகையாற்றில் இறங்கினார். சுற்றியிருந்த பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதற்காக ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட மண்டகப்படியை சுற்றி வந்து அருள்பாலித்தார். இதைதொடர்ந்து வீரராகவ பெருமாள் 3 முறை அழகரை வலம் வந்து முதல் மரியாதை ஏற்றுக்கொண்டார். தீபாராதனைக்கு பிறகு காலை 8 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டார்.
அங்கு மதியம் தீர்த்தவாரி உற்சவமும், அங்கப் பிரதட்சணமும் நடந்தது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் எழுந்தருளினார்.
நாளை(மே 10) காலை 7 மணிக்கு சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின் மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் திருமஞ்சனமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கறார். இரவு மீண்டும் ராமாயர் மண்டபத்திற்கு திரும்பும் அழகருக்கு 11 மணி முதல் தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை மறுநாள் இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்பட்டு மே 14 காலை10 மணிக்கு கோயிலை சென்றடைகிறார்.
(நன்றி - தினமலர்)
மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா ஸ்பெஷல்
அழகரின் "குதிரை' ரகசியம்: பாவ விமோசனம் தரும் சித்ரா பவுர்ணமி நன்னாளான இன்று, காலை கள்ளழகர் குதிரையில் வந்து வைகையாற்றில் இறங்கினார். குதிரையை போர்வீரர்களே அதிகம் பயன்படுத்துவார்கள். அழகரும் ஒரு போர் வீரரே! ஆம்..மானிடர்களாகிய நாம் பலவித கெட்ட குணங்களுடனும், "நான்' என்ற ஆணவ குணத்துடனும் வாழ்கிறோம். அதனால், பல பாவங்களைச் செய்கிறோம்.
நமக்குள் உறைந்து கிடக்கும் இந்த கெட்ட குணங்களுடன் போரிட்டு, பாவச்சுமையைக் குறைக்கவே அவர் குதிரை மீதேறி வந்திருக்கிறார். அவரது குதிரையின் நான்கு கால்களும் தர்மப்படி வாழ வேண்டும், வாழ்க்கையின் பொருள் உணர்ந்து வாழ வேண்டும், அதன் மூலம் இன்பம் பெற வேண்டும், பாவமற்ற வாழ்க்கை பிறப்பற்ற நிலையை நல்கும் என்ற நான்கு நிலைகளாக (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) உள்ளன. குதிரையின் ஒரு காது எதைக் கேட்கலாம் என்பதையும், மற்றொரு காது அதன் விளைவுகளையும் (பாவ, புண்ணியம்) குறிக்கிறது. அதன் கண்கள் எதைக் காண வேண்டும் என்பதையும், அதனால் கிடைக்கப் போகும் கண்ணுக்குத் தெரியாத பலன்களையும் தெரிவிக்கின்றன.
குதிரையின் முகம் நம் தலைவிதியைக் குறிக்கிறது. அதன் வாலுக்கு அபார சக்தி உண்டு. உடலில் ஈ மொய்த்தால், குதிரை தனது வாலை ஆட்டி எப்படி அதை விரட்டுமோ, அதுபோல, விதிப்படி நமக்கு துன்பம் ஏற்பட வேண்டும் என இருந்தால், அந்த துன்பங்களை அழகரின் தரிசனம் விரட்டி விடும் என்பதை குதிரையின் ஆடும் வால் எடுத்துரைக்கிறது. கழுத்தில் கட்டப்பட்ட சலங்கைகளும், காலில் கட்டிய சிலம்புகளும் இறைவனை மந்திர ஒலி எழுப்பி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அழகர் குதிரையின் கடிவாளத்தை இறுகப் பிடித்திருக்கிறார். அதாவது, கட்டறுந்து ஓடும் மானிடப்பிறப்புகளின் செயல்பாடுகள் தன் கையில் உள்ளது என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார். அவர் கையிலுள்ள சாட்டை, அவ்வாறு ஓடும் மானிடர்களுக்கு "சோதனை' என்னும் அடியைக் கொடுப்பதாக உள்ளது. குதிரையின் முதுகில் அவர் அமர்ந்துள்ளது, "அனைத்துலகும் தனக்குள் அடக்கம்' என்பதைக் காட்டுகிறது. அழகரை, இந்த ஆன்மிகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள், அவர் உடுத்தியுள்ள பட்டு வஸ்திரம் போல், இவ்வுலகில் செல்வவளமும், மறு உலகில் தெய்வநிலையும் பெற்று உய்வடைவர்.
(நன்றி - தினமலர்)
Thursday, May 7, 2009
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. சித்திரைத் திருவிழா ஏப்., 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 3ல் அம்மனுக்கு பட்டாபிஷேகமும், மே 5ல் திருக்கல்யாணமும் நடந்தது. இரவு மாசி வீதிகளில் சுவாமியும், அம்மனும் வலம் வந்து இரவு 12.30 மணியளவில் கோவிலுக்கு திரும்பினர். நேற்று தேரோட்டம் என்பதால் உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும் அதிகாலை 3 மணிக்குள் செய்யப்பட்டன. சித்திரைத் திருவிழாவிற்கென காப்பு கட்டிய பட்டர்கள் அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை செய்தனர்.
தேர்களை பாதுகாத்துவரும் தேரடி கறுப்பு சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு பூஜை செய்து சுவாமியையும், அம்மனையும் தேர்களில் எழுந்தருள செய்தனர். சக்கரங்களுக்கு பூசணிக்காய் பலி கொடுத்து, "ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா...' என பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே சுவாமி தேர் காலை 6.05 மணிக்கு புறப்பட்டது. ஆடி அசைந்து விளக்குத்தூண் சந்திப்பிற்கு வர, காலை 7.05 மணிக்கு அம்மன் தேர் புறப்பட்டது. மாசி வீதிகளில் வலம் வந்து காலை 11 மணிக்கு அடுத்தடுத்து நிலைக்கு வந்தன.
அம்மனுக்கும், சுவாமிக்கும் மன்னர் திருமலை நாயக்கர் செய்து கொடுத்த விலை மதிப்புடைய கற்கள் பதித்த நகைகள் அனைத்து விழாக்களிலும் அணிவிப்பது வழக்கம். தேரோட்டத்தின்போது மட்டும் அணிவிப்பதில்லை. தேர் ஆடி அசைந்து வரும்போது அதிர்வு காரணமாக கற்கள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் மாலை 3 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சகல மரியாதைகளுடன் கிரீடம் மற்றும் தங்க நகைகள் ஊர்வலமாக எடுத்து வந்து தேர்களில் வீற்றிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவிக்கப்பட்டன. நேற்று பிரதோஷம் என்பதால் கோவிலுக்கு இருவரும் திரும்பியவுடன் பிரதோஷ அபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களாக இருவரும் தனித்தனி வாகனங்களில் உலா வந்தனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காக நேற்றிரவு 7.30 மணிக்கு சப்தாவர்ணச் சப்பரத்தில் இருவரும் உலா வந்தனர். கோவிலுக்கு திரும்பிய பிறகு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று(மே 7) கோவில் பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன் 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது
(நன்றி - தினமலர்)
மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா ஸ்பெஷல்
காணக் கிடைக்காத காட்சி இன்று மட்டுமே: மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவின் கடைசி நாளான இன்று, நமது அன்னை மீனாட்சியும், தந்தை சுந்தரேஸ்வரரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர்.
சித்திரை திருவிழாவில் ரிஷபத்திற்கு மட்டும் இரண்டு நாள் இறைவனைச் சுமக்கும் பாக்கியம் கிடைக்கிறது. ஆறாம் திருவிழாவிலும் ரிஷபமே பவனி வந்தது. எதைத் தவற விட்டாலும், ரிஷப வாகன தரிசனத்தை மட்டும் விடவே கூடாது. ஆறாம் திருநாளில் தவற விட்டவர்கள் இன்று அவசியம் தரிசித்து விடுங்கள். அந்தளவுக்கு புண்ணியமான தரிசனம் இது.
ரிஷபம் என்னும் காளை தர்மத்தின் சின்னமாகும். இதன் கட்டான உடல் நமக்கு திட மனது வேண்டும் என்பதையும், கால்கள், எவ்வளவு சுமை இருந்தாலும் அதைத் தாங்கும் தன்னம்பிக்கை வேண்டும் என்பதையும், காதுகள் இறைவனின் திருநாமத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதையும், கண்கள் நல்லதையே பார்க்க வேண்டும் என்பதையும், ஆடும் வால், தீயவற்றை ஒதுக்க வேண்டும் என்பதையும், கழுத்தில் கட்டப்பட்ட கிண்கிணி மணிகள், இறைவனை மந்திரம் சொல்லி வழிபடுவதையும் குறிக்கின்றன.
ரிஷபத்தை "அற விடை' என்பர். "அறம்' என்றால் "தானதர்மம்' மட்டுமல்ல. தர்மம் தவறாமல் வாழ வேண்டும் என்பதையும் குறிக்கிறது. தர்மம் தவறாமல் வாழ்பவரே புண்ணியத்தை அடைவதற்கு தகுதியு டையவர். அதனால் தான் தர்மமே இறைவனை சுமந்து வருவதாகச் சொல்வர். மற்ற தரிசனங்கள் எல்லாருக்கும் கிடைக்கும். ஆனால், ரிஷப தரிசனம் மட்டும் ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். ரிஷப வாகனத்தில் பவனிவரும் சுவாமியை தரிசித்தால், இவ்வுலகில் என் னென்ன தான தர்மங்கள் உண்டோ, அத்தனையும் செய்த புண்ணியமும் கிடைக்கும்.
இந்த புண்ணியத்தை, தனது அடியார்களுக்கு வழங்குவதற்காகவே சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக்கூடாது. மீனாட்சியம்மைக்கு வைகையின் தென்கரையில் விழா எடுத்து அவளது அருளைப் பெற்று மகிழ்ந்த நாம், சுந்தரராஜப் பெருமாளாகிய அழகரை எதிர்கொண்டு அழைக்க நாளை வடகரைக்குச் செல்வோம்.
(நன்றி - தினமலர்)
கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன்' புறப்பட்டார் கள்ளழகர்
அழகர்கோவில்: கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் பக்தர்களின் "கோவிந்தா' கோஷம் முழங்க தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர். மே 9ம் தேதி காலை 7 மணிக்கு மேல் வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சித்திரை திருவிழா மே 5ம் தேதி துவங்கியது. முதல் இரண்டு நாட்களும் தோளுக்கினியாள் திருக்கோலத்தில் தோன்றிய பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவிழாவின் முக்கிய விழாவான ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக மாலை 6 மணிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப் பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். கோவிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா' கோஷம் முழங்க கள்ளழகரை தரிசித்தனர். பின் 18ம் படி கருப்பண சுவாமி சன்னிதி முன்புள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் வையாழி நிகழ்ச்சியும், கொம்பு சாத்தும் நிகழ்ச்சியும் நடந்தன. சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் முடிந்து கோவில் காவல் தெய்வமான கருப்பண சுவாமியிடம் உத்தரவு பெற்று இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார்.
எதிர்சேவை: இரவு 11 மணிக்கு அப்பன் திருப்பதி சீனிவாச கல்யாண பெருமாள் கோவில் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நாளை அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு கள்ளழகர் காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வருகிறார். அங்கு பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து புதூரிலும், மாலையில் தல்லாகுளத்திலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோவில் வரும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன.
வைகை ஆற்றில் இறங்குறார்: மே 9ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னிதி எதிரில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அங்கிருந்து புறப்பட்டு வழியில் உள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் லட்சக் கணக்கான பக்தர்களின் "கோவிந்தா' கோஷம் முழங்க காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின் காலை 11 மணிக்கு ராமராயர் மண்டகபடி சென்றடைகிறார். அங்கு பக்தர்களின் தண்ணீர் பீச்சும் நிகழ்ச்சியும், அங்கப்பிரதட்சணமும் நடக்கிறது. அன்று இரவு வண்டியூர் பெருமாள் கோவிலை சென்றடைகிறார்.
(நன்றி - தினமலர்)
Tuesday, May 5, 2009
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
மங்கலநாண் சூடும் மதுரை மீனாட்சி: மதுரையில் மங்கல மீனாட்சி மங்கலநாண் சூடிக்கொண்ட நன்னாள் இன்று. வீட்டில் நம் பெற்றவர்களுக்கு நாம் சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாக விளங்கும் நம் அன்னை மீனாட்சிக்கு, அவளது பிள்ளைகளான நாமெல்லாம் இன்று திருக்கல்யாணம் நடத்தி மகிழ்ந்தோம்.
மலையத்துவஜனின் மகளாக அவதரித்த தடாதகைப் பிராட்டிக்கு பட்டம் சூட்டினான் மன்னன். எட்டுத்திக்கும் வெற்றி நிலைநாட்ட திக்விஜயம் புறப்பட்டாள் தேவி. கயிலைநாதனைக் கண்டாள். தனக்குஉரிய மணாளன் இவரே என்று அறிந்தாள். நல்லநாளில் முகூர்த்த வேளையில் ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்றெடுத்த அம்மைக்கும், அப்பனுக்கும்திருக்கல்யாண வைபவத்தை நிகழ்த்த மதுரையம்பதியில் எல்லா மக்களும் கூடினார்கள். மங்கல வாத்தியங்கள் முழங்க, சொக்கேசனின் கரம் பிடித்தாள்.
சக்தியில்லாமல் சிவமில்லை. சிவமில்லாமல் சக்தியில்லை. சக்தியும் சிவமும் இணைந்தால் தானே உலக இயக்கமே நடக்கிறது. இதை நமக்கு உணர்த்தவே அம்மையப்பராக இருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்துகிறோம்.
உலக உயிர்க்குலங்கள் அனைத்தும் உமையவளின் பிள்ளைகள். ""என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே'' என்பார் மணிவாசகப்பெருமான். ஆம்! நாம் கண்கள் பெற்ற பயனை, இன்று அம்மையப்பரை திருமணக்கோலத்தில் கண்டு மகிழ்ந்ததன் மூலம் அடைந்திருக்கிறோம். அபிராமி பட்டர் தன் அந்தாதியில், ""கண்களிக்கும்படி கடம்பாடவியில் (கடம்பவனமாகிய மதுரையில்) கண்டேன்'' என்று குறிப்பிடுகிறார். இத்தலத்தில் நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தையே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கருத வேண்டிஉள்ளது.
உமையவளுக்கு ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொருவிதமான ரூப லாவண்யம் உண்டு. அதில் மதுரைக்குரிய தனிச்சிறப்பு திருமணக்கோலம் தான். திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பெண்மைக்கே உரிய நளினமும் நாணமும் கொண்ட மீனாட்சியம்மையின் திருக் கரத்தை கம்பீரமாய் மாப்பிள்ளை மிடுக்கோடு நிற்கும், சொக்கநாதப்பெருமானின் திருக்கரத்தோடு சேர்க்கும் திருமணக்கோலம் உலகப்பிரசித்தம்.
மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் திருப்பூட்டும் நல்ல நேரத்தில் அவரவர் வீடுகளில் பெண்கள் எல்லோரும் திருமாங்கல்யச்சரடு மாற்றிக் கொள்வது தொன்று தொட்டு வருகின்ற மரபாகும். எல்லோராலும் கோயிலுக்குள் நுழைந்து மணக்கோலம் காண்பதென்பது நடக்கிற ஒன்றா! இதற்காகவே, புதுமாப்பிள்ளை சுந்தரேசர் இன்று இரவு யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் வலம் வந்து அருள் செய்வார்கள். நாம் நெரிசல் இல்லாமல் நமக்கு நாமே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு அவர்களை வணங்கி மகிழ்வோமே!
( நன்றி - தினமலர்)
Sunday, May 3, 2009
மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா ஸ்பெஷல்
வாடகை என்ன தர வேண்டும்: நானே உலகத்தின் அதிபதி என்ற முறையில், இன்று அன்னை மீனாட்சி பட்டம் சூடிக்கொள்கிறாள். அதனால் தான் இன்று சுவாமியும், அன்னையும் இன்று வெள்ளி சிம்மாசன வாகனத்தில் பவனி வருகின்றனர். அவளுக்கு மட்டும் தான் சிம்மாசனம் இருக்கிறதா? அவள் தன் குடிமக்களும் நன்றாக இருக்க வேண்டுமே என்பதற்காக, சூரியன், சந்திரன், நதி, கடல் என சகல வசதிகளையும் கொண்ட விலை மதிப்பு மிக்க உலகத்தையும் தந்திருக்கிறாள். ஆனால், என்ன தான் இருந்தாலும் சும்மா தருவாளா? ஒருவரது இடத்தில் நாம் தங்கினால் அதற்கு வாடகை கொடுத்தாக வேண்டுமே! அதுபோல் அவளும் நம்மிடம் வாடகை எதிர்பார்க்கிறாள். அந்த வாடகை எவ்வளவு என்பதை நமக்கு தெரிய வைப்பதே எட்டாம் திருவிழா. இறைவனுக்கு எட்டு வகை குணங்கள் உண்டு. அந்த எட்டு குணங்களும் நம்மிடமும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். அவை என்னென்ன?
முற்றும் உணர்தல்: நாம் யார், நமக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது, இங்கேயே தங்க வேண்டும் என்று நினைக்கிறாமே! இது நியாயமா என்று உணர்வது. வரம்பில் இன்பமுடைமை: நமக்கென ஆண்டவன் இவ்வளவு ஆயுள், இவ்வளவு வசதி வாய்ப்பு என நிர்ணயித்துள்ளான். அந்தக் காலத்தையும், வசதியையும் வரம்பு மீறிய செயல்களுக்கு பயன்படுத்தாமல் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்துதல். பாசத்தை விட்டு நீங்குதல்: நாம் குடும்பத்திற்கு வேண்டிய பணிவிடையைச் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் நன்றி மறந்தாலோ, பிரிந்து சென்றாலோ, நாமே பிரிய வேண்டிய நிலை வந்தாலோ, அந்த உறுப்பினர்களில் ஒருவரை இழக்க வேண்டி வந்தாலோ வருத்தப்படாத தன்மை.
முடிவில் ஆற்றல் உடைமை: எடுத்த முடிவில் விடாப்பிடியாக இருந்து சாதித்தல். தன் வசப்படுதல்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து உறுப்புகளும் நமக்கு வசப்பட்டு இருத்தல். பேரருள் உடைமை: பிறர் மீது அன்பு செலுத்துதல். இயற்கை உணர்வுடைமை: என்ன நடந்தாலும் "இது உலக இயற்கை தானே' என்று எளிதாக எடுத்துக் கொள்ளுதல்.
தூய உடம்புடையனாதல்: இவ்வுலக வாழ்வு உனக்குச் சொந்தம் என்ற மாய எண்ணத்தை விட்டு இறைவனால் தரப்பட்ட இவ்வுடலை மீண்டும் அவனிடமே சேர்க்க வேண்டும் என உணருதல். இந்த எட்டு குணங்களும் நம்மில் அநேகரிடம் இல்லை. ஏன்...இதுபற்றி சிந்தித்துக் கூட பார்த்ததில்லை. ""எங்களிடம் இந்த குணங்களே இல்லை. எனவே, உனக்கு பலநாள் வாடகை பாக்கி வைத்துள்ளோம். இந்த எட்டு குணங்களையும் எங்களுக்கு தந்து உன் வாடகையை கழித்துக்கொள்,'' என இந்நாளில் தாய் மீனாட்சியிடமும், தந்தை சுந்தரேஸ்வரரிடமும் கேட்க வேண்டும்.
( நன்றி - தினமலர்)
Saturday, May 2, 2009
மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா ஸ்பெஷல்
ஏழ்பிறப்பும் இணையும் ஒரே சொந்தம்: "ஏழேழு பிறவியிலும் நாம் இணைந்திருப் போம்' என்று அன்புமிக்க கணவனும் மனைவியும் பேசிக் கொள்வார்கள். ஆனால், இது நடக்கப் போகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. நம் மதுரைத் தாய் மீனாட்சியைப் பெற்ற அன்னை காஞ்சனமாலைக்கே இந்த கொடுப் பினை இல்லையே! அவள் முற்பிறப்பில் கந்தர்வக்கன்னியாக இருந்தாள். மறுபிறப்பில் மானிட ஜென்மம் எடுத்து மலையத்துவஜனின் மனைவியானாள். ஆனால், ஏழுபிறப்பிலும் ஒரே ஒரு சொந்தம் மட்டுமே தொடரும். அது தான் அன்னை மீனாட்சிக்கும் நமக்கும் உள்ள தொடர்பு. இது பிரிக்க முடியாத பந்தமாக இருக்கிறது.
இந்த பந்தம் நிரந்தரமாக வேண்டுமென்றால் பிறவிகளை அறுத்தெறிந்து விட்டால், நாம் மீனாட்சியுடனும், சுந்தரேஸ்வரருடனும் இரண்டறக் கலந்து விடலாம். நமக்கு ஏழு பிறப்புகள் மட்டுமல்ல, ஏழு வகை பிறவிகளும் ஏற்படுகின்றன. அவரவர் செய்த தீவினை, நல்வினைக்கேற்ப தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என ஏதோ ஒன்றாகப் பிறக்கிறோம். இந்த ஏழுவகை பிறவியுமே தொல்லை தருவது தான். தாவரமாய் பிறந்தால் தண்ணீரின்றி தவிக்க வேண்டி வரும் அல்லது வெள்ளத்தில் மூழ்க வேண்டியிருக்கும்! பூச்சியாகப் பிறந்தால் பிறர் காலில் மிதிபட்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்! தேவராகப் பிறந்தால் அசுரர்களால் அல்லல்பட வேண்டியிருக்கும்! எனவே இறைவனிடம், ""ஆண்டவா! ஏழாம் திருநாளான இன்று ஏழுவகை பிறவியுமே எனக்கு வேண்டாம். பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை கொடு. அதுவரை எங்களைச் செல்வச்செழிப்புடன் வாழ வை,'' என்று பிரார்த்திக்க வேண்டும். இன்று அன்னை மீனாட்சி யாளி வாகனத்திலும், சுந்தரேஸ் வரர் நந்திகேஸ்வரர் வாகனத்திலும் பவனி வருகிறார்கள்.
(நன்றி - தினமலர்)